இந்திய இன்னிங்ஸின் 34ஆவது மற்றும் 37ஆவது ஓவர்களின் போது இந்த விதிமீறல்கள் இடம்பெற்றன.

இலங்கை, இந்தியா மற்றும் தென்னாபிரிக்க ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்று (15) நடைபெற்ற இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான போட்டியில், ஆடுகளத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் விதிகளை மீறி ஓடிய குற்றச்சாட்டின் கீழ் இந்தியா ‘ஏ’ அணிக்கு 10 ஓட்டங்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய வீரர் விப்ராஜ் நிகாம் (Vipraj Nigam) நடுவர்களின் எச்சரிக்கையையும் மீறி ஆடுகளத்தின் நடுப்பகுதிக்குள் இருமுறை ஓடியதால், களநடுவர்களான பிரகீத் ரம்புக்வெல்ல மற்றும் சாந்த பொன்சேகா ஆகியோர் தலா 5 ஓட்டங்கள் வீதம் இருமுறை இந்த அபராதத்தை விதித்தனர்.

இந்திய இன்னிங்ஸின் 34ஆவது மற்றும் 37ஆவது ஓவர்களின் போது இந்த விதிமீறல்கள் இடம்பெற்றன.

37ஆவது ஓவரில் விப்ராஜ் நிகாம் பந்தை ‘சோர்ட் தேர்ட்’ திசையை நோக்கி தட்டிவிட்டு ஓட்டத்தைப் பெற முயன்றார். எனினும், மறுமுனையில் இருந்த சூர்யான்ஷ் ஷெட்கே (Suryansh Shedge) அவரைத் திருப்பி அனுப்பியதால், மீண்டும் தனது விக்கெட்டைப் பாதுகாத்துக் கொள்ள ஓடிவந்த நிகாம், ஆடுகளத்தின் நடுவே உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் ஓடினார்.

இதற்கு இரண்டு ஓவர்களுக்கு முன்னரும் அவர் இதேபோன்ற தவறை இழைத்திருந்தார். அதற்கு முன்னதாகவே நடுவர்கள் இந்திய அணிக்கு உத்தியோகபூர்வ எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அடுத்தடுத்து இருமுறை இந்த தவறு நிகழ்ந்ததால் தலா 5 ஓட்டங்கள் வீதம் 10 ஓட்டங்கள் இலங்கைக்கு அபராதமாக வழங்கப்பட்டன.

இதன் காரணமாக இலங்கை ‘ஏ’ அணி தனது பதில் இன்னிங்ஸைத் தொடங்குவதற்கு முன்னரே அவர்களது கணக்கில் 10 ஓட்டங்கள் சேர்க்கப்பட்டன.

முன்னதாக, இந்திய ‘ஏ’ அணி 143 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, விப்ராஜ் நிகாம் மற்றும் சூர்யான்ஷ் ஷெட்கே ஜோடி 8ஆவது விக்கெட்டுக்காக 104 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மீட்டெடுத்தது.

நிகாம் 49 பந்துகளில் 51 ஓட்டங்களைப் பெற்று ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஷெட்கே 66 பந்துகளில் 72 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, இந்தியா ‘ஏ’ அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 265 ஓட்டங்களைக் குவித்தது.

இதே இன்னிங்ஸின் போது இலங்கை ‘ஏ’ அணியும் ஒரு தவறுக்காக 5 ஓட்டங்களை அபராதமாக வழங்கியிருந்தது.

இன்னிங்ஸின் 16ஆவது ஓவரில் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல, வீசப்பட்ட ‘வைட்’ பந்தைச் சரியாகப் பிடிக்கத் தவறியதால், பந்து அவருக்குப் பின்னால் தரையில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தலைக்கவசத்தில் மோதியது.

இதனால் கிரிக்கெட் விதிகளின்படி இந்தியா ‘ஏ’ அணிக்கு 5 மேலதிக ஓட்டங்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#newsicon  #Srilanka #TruthAtAllCosts

Comments

Popular posts from this blog

15 நாட்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்துள்ளது ஆந்திர சிறுமி ஞானேஸ்வரி காணாமல் போனார் என்ற இந்த அதிர்ச்சிகரமான செய்தி.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது காதல் மனைவி எமிலி செங்கல்....

12 ஆண்டுகள்... இறந்துவிட்ட தனது எஜமானுக்காக காத்திருந்த நாய்! மனதை உருக்கும் உண்மைக் கதை...